”வீடியோ போலியானது” குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுகிறேன்: கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரி
நீர்ப்பாசனத்துறை மந்திரிரமேஷ் ஜார்கிகோளி இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் செக்ஸ் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதவி விலக கோரி காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் குதித்துள்ளது.
பெங்களூரு,
நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் செக்ஸ் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதவி விலக கோரி காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் குதித்துள்ளது.
சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் நேற்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்தை நேரில் சந்தித்து, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது ஒரு செக்ஸ் புகார் மனுவை கொடுத்தார். அதன் பிறகு தினேஷ் கல்லஹள்ளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் வட கர்நாடகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அணைகள் குறித்து ஆவண படம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றி அவருடன் செக்ஸ் வைத்துள்ளார். ஆனால் வாக்குறுதி அளித்தப்படி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் அவரிடம் செக்ஸ் வீடியோ இருப்பதை ரமேஷ் ஜார்கிகோளி தெரிந்து கொண்டார். அந்த வீடியோவை வழங்கும்படியும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் ரமேஷ் ஜார்கிகோளி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த குடும்பத்தினர் என்னிடம் வந்து அந்த ஆபாச வீடியோ சி.டி.யை கொடுத்து, தங்களுக்கு உதவுமாறு கேட்டனர். அதனால் நான் இங்கு வந்து கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தேன். அந்த புகாரை படித்து பார்த்த கமிஷனர், சம்பவம் கப்பன் பார்க் போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளதால், அந்த போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கும்படி கூறினார்.
அதனால் நான் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆர்.டி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அவரது பாதுகாப்பு கருதி அவரை பற்றிய விவரங்களை வெளியிட மாட்டேன். அவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்.இவ்வாறு தினேஷ் கல்லஹள்ளி கூறினார்.
மேலும் அந்த ஆபாச வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓட்டல் ஒன்றின் படுக்கை அறையில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோளி அரைகுறை ஆடையுடன் ஆபாசமான முறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் படுக்கையில் அந்த பெண்ணுடன் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன.
அதில் ரமேஷ் ஜார்கிகோளியின் முகம் தெளிவாக தெரிகிறது. செக்ஸ் வீடியோ மட்டுமின்றி, அந்த பெண்ணுடன் அவர் செல்போனில் உரையாடிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. மேலும் வாட்ஸ்-அப்பில் அவர்கள் இருவரும் பேசிய பதிவும் வெளியாகியுள்ளது.
இந்த ஆபாச வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபாச வீடியோ வெளியாகி இருப்பதால் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெங்களூரு, சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் நேற்று இரவே போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்து அவப்பெயர் ஏற்படும் என்பதால், ரமேஷ் ஜார்கிகோளி இன்று (புதன்கிழமை) தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த விடீயோ குறித்து பதில் அளித்துள்ள சம்பந்தப்பட்ட மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, “ அந்த வீடியோ போலியானது. வீடியோவில் உள்ள பெண் யாரென்றே எனக்கு தெரியாது. என் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் அரசியலில் இருந்தே விலக தயாராக இருக்கிறேன்”என்றார்.
Related Tags :
Next Story