தமிழகத்தில் காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு


தமிழகத்தில் காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு
x
தினத்தந்தி 3 March 2021 6:57 AM IST (Updated: 3 March 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது.

புதுடெல்லி,

விசாரணைக்கு வருபவர்கள் மற்றும் கைதிகள் மீதான சித்ரவதைகளை தடுக்க, அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த தேவையான, போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும்.

அனைத்து போலீஸ் நிலையங்களின் நுழைவாயிலும், லாக்அப்-களிலும், காரிடார்களிலும், லாபி, ரிசப்ஷன், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகளிலும், லாக்அப்புக்கு வெளியேயும், போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் வெளிப்புறத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுதொடர்பாக விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆஜராகவும் கடந்த ஜனவரி 27-ந்தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆஜரானார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் பணிகளை நிகழாண்டுக்குள் நிறைவு செய்ய காலக்கெடு விதித்து உத்தரவிட்டனர்.

இதுபோல, சி.பி.ஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவுப்பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உத்தரவை அமலாக்கும் காலவரிசை ஆகிய விவரங்களை அடங்கிய பிரமாண பத்திரத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.

சி.சி.டி.வி. பொருத்தும் விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்க அரியானா உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர்த்து, ஏனைய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமலாக்கும் காலவரிசை விவரங்களை 4 மாதங்களுக்குள் தெரிவிக்கவும், நிதி ஒதுக்கிய பிறகு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை 5 மாதங்களுக்குள் செயல்படுத்தவும் உத்தரவிட்டனர்.


Next Story