ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்


ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
x
தினத்தந்தி 3 March 2021 9:43 AM GMT (Updated: 3 March 2021 9:43 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இதன் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இரண்டாவது கட்டத்தின் 2-வது நாளான நேற்று மூத்த மத்திய மந்திரிகள் 3 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை டுவிட்டரில் தெரிவித்த அவர்,“ தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது” என குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும், டாக்டர்களுக்கும் அவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டார்.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இன்று ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி அவருக்கு போடப்பட்டது.


Next Story