மும்பை மின்வெட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா வலியுறுத்தல்


மும்பை மின்வெட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2021 9:25 PM GMT (Updated: 3 March 2021 9:25 PM GMT)

மும்பை மின்வெட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மராட்டிய மாநில சட்டசபையில் பாஜக வலியுறுத்தியுள்ளது.

மும்பை,

கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் முயற்சியால் இருதரப்பு மோதல், உயிரிழப்புகள் என கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதி ஏற்படுத்துவதற்காக இருதரப்பும் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக கடந்த மாதத்தில் இருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்று வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, மும்பையில் கடந்த அக்டோபர் 12-ந்தேதி திடீரென மிகப்பெரிய மின்தடை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இதனால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு, கொரோனா ஊரடங்கால் வீடுகளில் இருந்தே பணியாற்றியவர்களுக்கு இடையூறு என மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பொருளாதார கட்டமைப்புகளும் கணிசமான பாதிப்புகளை சந்தித்தன.

இந்த தடங்கலை சீரமைத்து அத்தியாவசிய பணிகளுக்கு மின் இணைப்பு வழங்கவே 2 மணி நேரம் ஆனது. இந்த திடீர் மின்தடை குறித்த விசாரணைக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்தியா-சீனா ராணுவ மோதலால் லடாக்கில் பதற்றம் உச்சத்தில் இருந்த நாட்களில் சீன ஹேக்கர்கள் இந்திய மின்சார துறையின் கணினிகளில் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டதை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்து உள்ளது.

இந்த பிரச்சினை நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. சுதீர் முங்கண்டிவார் கூறியதாவது:-

மும்பையில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினை சாதாரணமானது அல்ல. இது சைபர் தாக்குதல் நாசவேலையாக இருந்தால், அதை அப்படியே விட்டு விட முடியாது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். எனவே நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்போகிறேன். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கடிதத்தில் வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story