அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும்; விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும்; சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேச்சு


அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும்; விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும்; சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 4 March 2021 8:48 AM IST (Updated: 4 March 2021 8:48 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும் என்றும், மராட்டியத்தில் இருந்து விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும் என்றும் சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேசினார்.

பா.ஜனதா குற்றச்சாட்டு
சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக இந்துத்வா சித்தாந்தத்தை அடகு வைத்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்தநிலையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அவுரங்காபாத் பெயர் மாற்றத்திற்கு ஏற்படும் தாமதம் குறித்து பா.ஜனதா கேள்வி எழுப்பியது.

இதற்கு இந்துத்வா பற்றி நீங்கள் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காட்டமாக பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சீனா ஊடுருவி இருக்காது
இந்துத்வா கொள்கை கொண்ட சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கூறி 2 முறை அரசுக்கு கடிதம் எழுதினேன். இதுவரை கொடுக்கப்படவில்லை.நீங்கள் சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்காமல், அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில் எங்களுக்கு பாடம் எடுக்கிறீர்களா? அவுரங்காபாத்தின் பெயர் நிச்சயமாக மாற்றப்படும்.பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் எல்லையில் அமைக்கப்பட வேண்டிய முள்வேலி விவசாயிகளுக்கும் டெல்லிக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இதை எல்லையில் செய்திருந்தால் சீனா ஊடுருவியிருக்காது.

விலை இரட்டிப்பு
வாக்குறுதியளித்தபடி தங்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக எரிபொருள் விலை இரட்டிப்பாகி உள்ளது.விதர்பாவை மராட்டியத்தில் இருந்து பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா விட்டுவிட வேண்டும். விதர்பாவை மராட்டியத்தில் இருந்து பிரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே வாழ்ந்த அறையில் கலந்துரையாடியபோது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை.இதுதான் சிவசேனா தலைவர் பால் 
தாக்கரே மீதான உங்கள் அன்பா? நாங்கள் அதை ஒரு அறையாக கருதவில்லை, ஆனால் அது ஒரு கோவில்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story