‘‘விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சோதனை நடத்துவதா?’’ மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம்


‘‘விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சோதனை நடத்துவதா?’’ மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம்
x
தினத்தந்தி 5 March 2021 6:29 AM IST (Updated: 5 March 2021 6:29 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக மத்திய அரசு சோதனை நடத்துவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி, 

பிரபல இந்தி இயக்குனர், தயாரிப்பாளரான அனுராக் காஷ்யப், பிரபல தமிழ், இந்தி நடிகை டாப்சி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனேயில்30 இடங்களில் சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்தது.

அனுராக் காஷ்யப் நடத்தி வந்த பாந்தம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் மீதான வரிஏய்ப்பு புகார் தொடர்பாக இச்சோதனை நடந்தது. அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றிய டாப்சி வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

அனுராக் காஷ்யப், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் ஆவார். நடிகை டாப்சி, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், இந்த சோதனைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக மோடி சோதனை’ என்ற ஹேஷ்டேக்கில் கூறியிருப்பதாவது:-

தனது தாளத்துக்கு ஏற்ப வருமானவரித்துறையை மத்திய அரசு ஆட வைக்கிறது. அதன் நட்பு வட்டாரத்தில் உள்ள ஊடகங்கள் பணிகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக மத்திய அரசு சோதனை நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story