டெல்லி போராட்டம்: கோடையை எதிர்கொள்ள மின் விசிறி, கொசு வலை வசதிகளுடன் புறப்படும் டிராக்டர்கள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கோடையை எதிர்கொள்ள மின் விசிறி, கொசு வலை உள்ளிட்ட வசதிகளுடன் டிராக்டர்கள் புறப்படுகின்றன.
புதுடெல்லி,
டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இந்த நிலையில் டெல்லி எல்லைப்பகுதிகளில் 100வது நாளாக விவசாயிகளின் போராட்டம் இன்று தொடர்ந்து வருகிறது. திக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் பற்றி கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் மாநில செயலாளர் எஸ்.எஸ். பேந்தர் கூறும்பொழுது, கோடை கால சூழலை முன்னிட்டு டிராக்டர்களில் நாங்கள் மின் விசிறிகளை பொருத்தி உள்ளோம். அந்த டிராக்டர்கள் டெல்லிக்கு புறப்படும்.
இதேபோன்று போராட்ட பகுதியில் கொசுக்களை தடுக்கும் வகையில் அதற்கான கொசு வலைகளையும் டிராக்டர்களில் அமைத்துள்ளோம். காற்று வசதிக்கான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story