ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதம் தொடங்கியது; நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடுகின்றன; கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் காகேரி பேச்சு
கர்நாடக சட்டசைபையில் ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதம் தொடங்கியது. இதன் மீது பேசிய சபாநாயகர் காகேரி, நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடுவதாக கூறினார்.
கர்நாடக சட்டசைபையில் ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதம் தொடங்கியது. இதன் மீது பேசிய சபாநாயகர் காகேரி, நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடுவதாக கூறினார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று கடும் அமளிக்கு இடையே சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
ஜனநாயக நாடுஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அமைதி மற்றும் போர் காலத்தில் தங்களை வழிநடத்த தலைவர் ஒருவரை நியமித்து செயல்பட்டதாக வரலாற்று ஆவணங்களில் பதிவாகியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நமது நாடு கடைப்பிடித்து வருகிறது.
மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து அமல்படுத்துவது ஆட்சி செய்யும் அரசின் கடமை ஆகும். நாட்டின் வளங்களை சமமாக பகிர்ந்தளித்து மக்களின் முன்னேற்றத்திக்காக அரசுகள் பாடுபடுகின்றன. 6,452 சாதிகள், 16 மதங்கள், 152 மலைவாழ் மக்கள் பிரிவுகள் இருக்கும் மிகப்பெரிய நாடு இந்தியா. 29 தேசிய பண்டிகைகள், 11 ஆயிரத்து 618 மொழிகள், 15 லட்சத்து 68 ஆயிரம் கிராமங்கள் நமது நாட்டில் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது ஒரு திருவிழாவை போல் இருக்கிறது.
பிரதமர் மோடி விருப்பம்நமது நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால், ஒவ்வொரு தேர்தலும் ஜனநாயக திருவிழா ஆகும். நாட்டில் 28 மாநிலங்கள், 8 மத்திய அரசு ஆட்சி செய்யும் மாநிலங்கள் உள்ளன. இதில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். 740 மாவட்டங்களை கொண்டுள்ள பெரிய நாட்டில் நாடாளுமன்ற மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். இத்தகைய பெரிய நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமா? என்பது சவாலான விஷயம்.
நாட்டில் 1,200 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 150 கட்சிகள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரே தேசம் ஒரே தேர்தல் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடுகின்றன.
5 திருத்தங்கள்கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அடிக்கடி தேர்தல் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனால் ரூ.60 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாதக்கணக்கில் அமல்படுத்தப்படுகிறது. இதனால் வளர்ச்சி பணிகள் தடைபடுவதோடு மக்களும் அரசின் திட்ட பயன்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் மனித உழைப்பு, நேரம், அதிகளவில் பணம் மிச்சமாகும். ஒரே தேசம் ஒரே தேர்தலை நடத்த வேண்டுமென்றால் அரசியல் சாசனத்தில் 5 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற பதவி காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைப்பது, மாநில சட்டமன்றங்களின் பதவி காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது, மாநிலங்களவையை கலைப்பது, மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது ஆகிய திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது.
விரிவாக விவாதம்இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விரிவாக விவாதம் நடத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்ட பிறகு அனைவரின் கருத்துகளின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது நிலைப்பாடு.
இவ்வாறு காகேரி கூறினார்.