தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு


கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை
x
கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை
தினத்தந்தி 5 March 2021 7:41 AM IST (Updated: 5 March 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டது என்று கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடக சட்டசபை நிகழ்வுகள் குறித்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாள் முழுவதும் தர்ணா

சட்டசபையில் காங்கிரஸ் இதற்கு முன்பு இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது இல்லை. இன்று (அதாவது நேற்று) அக்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரசார் முன்பு ஒப்புக்கொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதுபற்றி விவாதிக்கலாம் என்று அக்கட்சியினர் கூறினர். அவர்களின் ஆலோசனைப்படியே இந்த விவாதம் நடத்தப்படுகிறது.

ஆனால் தற்போது காங்கிரஸ் ஏதாவது காரணத்தை கூறி இந்த விவாதத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. கர்நாடக சட்டசபை வரலாற்றில் சபாநாயகர் மேற்கொண்ட முடிவுக்கு எதிராக நாள் முழுவதும் தர்ணா நடத்தியது கண்டிக்கத்தக்கது. சங்கமேஸ்வர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆஜராகவில்லை

தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரசார் வீணடித்துவிட்டனர். தர்ணா மூலம் சபையை சட்டவிரோதமாக தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது ஏற்கக்கூடியது அல்ல. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் நடைமுறைக்கு காங்கிரசார் ஆதரவு வழங்கினர். ஆனால் சித்தராமையா தற்போது அதற்கு நேர் எதிராக செயல்படுகிறார்.

சங்கமேஸ்வரை தனது அறைக்கு வருமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் சபாநாயகர் முன் ஆஜராகவில்லை. அதன் பிறகு சபையில் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். அவரது ஒழுங்கீனத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பது சரியல்ல. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக நல்ல முறையில் செயலாற்ற தவறவிட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story