சங்கமேஸ்வர் இடைநீக்க உத்தரவை வாபஸ் பெற வேண்டும்; கர்நாடக சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தல்
சங்கமேஸ்வர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தினார்.
உறுப்பினர்கள் தர்ணா
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் கொண்டு வந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து சபையை ஒத்திவைத்தார்.
சபை மீண்டும் கூடியபோது, சட்டையை கழற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வரை ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா மேற்கொண்டனர். இதையடுத்து சபையை சபாநாயகர் காகேரி சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.
கடும் அமளிசபை மீண்டும் கூடியபோது, சங்கமேஸ்வரை சித்தராமையா சபைக்குள் அழைத்து வந்தார். அதற்கு சபாநாயகர் காகேரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்டவருக்கு சபையில் இருக்க அனுமதி இல்லை என்று அவர் கூறினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறிது நேரத்திற்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது, சபாநாயகர் காகேரி பேசுகையில், "காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தியபோது சங்கமேஸ்வர் என்ன செய்தார். அவரது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை எதிர்க்கட்சி தலைவர் சகித்துக்கொள்கிறாரா?" என்றார். அதற்கு சித்தராமையா, "சங்கமேஸ்வர் என்ன உடையே இல்லாமல் நிர்வாணமாக இருந்தாரா?.
இடைநீக்கம் செய்யுங்கள்இந்த சபையில் எத்தனையோ பேர் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளை பார்க்கவில்லையா?. முன்பு ஒரு முறை தற்போது பா.ஜனதா உறுப்பினராக இருக்கும் கூலிஹட்டி சேகர், சட்டையை கழற்றி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவில்லையா?. வேண்டுமானால் எங்களையும் இடைநீக்கம் செய்யுங்கள்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "அப்போது நடந்த விஷயங்களை இங்கே குறிப்பிட வேண்டாம். தற்போது நடந்தவற்றை பற்றி பேசுங்கள். சங்கமேஸ்வரின் ஒழுங்கீனத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?" என்றார்.
அப்போது மீண்டும் பேசிய சித்தராமையா. சங்கமேஸ்வர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை சபாநாயகர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அதைத்தெடர்ந்து சபையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.