நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக களமிறக்கப்படும் பாஜக வேட்பாளர்?
மேற்குவங்காளத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார்? என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா:-
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையில், இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக வரும் 11-ம் தேதி அவர் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பாஜக-வில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது.
நந்திகிராம் தொகுதி சுவேந்து அதிகாரியின் செல்வாக்கு நிறைந்த தொகுதியாக உள்ளது. இவர் இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.
சுவேந்து அதிகாரியை மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிட வைப்பது தொடர்பான இறுதி முடிவை பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து எடுக்க உள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story