பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் - பிரதமர் மோடி


பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 March 2021 4:05 PM GMT (Updated: 5 March 2021 4:05 PM GMT)

பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று இந்தியா - சுவிடன் இடையிலான உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி கூறினார்.


புதுடெல்லி, 

இந்தியா - சுவீடன் இடையிலான மெய்நிகர் உச்சிமாநாடு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி - சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: 

ஸ்வீடன் மக்களுக்கு இந்த தருணத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறேன். ஸ்வீடனில் நேற்று முன்தினம் நடந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பாக அனைத்து இந்திய குடிமக்கள் சார்பாக காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

இதுவரை சுமார் 50 நாடுகளுக்கு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். வரவிருக்கும் நாட்களில் இன்னும் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

பருவநிலை மாற்றம் விவகாரம் தான் இந்தியா , சுவீடன் நாடுகளுக்கு முக்கிய பிரச்சினை. இதில், இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும். இயற்கையுடன் இணைந்து வாழ்வதே, இந்தியாவின் கலாசாரம். பாரீஸ் ஒப்பந்தத்தில், போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்த இலக்கை அடைவது மட்டுமல்லாமல், அதில் நாம் வெற்றி பெறுவோம். ஜி20 நாடுகளில், இந்தியா, தனது இலக்குகளை நன்கு அடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இந்தியா 162 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம், முதலீடு, ஸ்டார்ட் ஆப் ஆராய்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும்.

இவ்வாறு  பிரதமர் மோடி கூறினார். 

Next Story