முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2021 4:35 AM IST (Updated: 6 March 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வேதியியல் பாடத்துக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்துவிட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கியது.

வேதியியல் ஆசிரியர் நியமனம் குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்தது தவறு என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை முழுமையாக ஏற்கிறோம்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெறுவதால், பிற பிரிவினருக்கான இடஒதுக்கீடு பாதிப்படையவில்லை. அரசமைப்பு சட்டத்தையும் மீறும் வகையில் இல்லை. இதன்படி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படியும் தேர்வர்கள் பணியில் சேர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story