கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்க கொண்டுவரப்பட்டது ‘பிளாட்பாரம் டிக்கெட்’ கட்டண உயர்வு தற்காலிகமானது - ரெயில்வே விளக்கம்
சில ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தற்காலிகமானது. கொரோனா காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த உயர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது என ரெயில்வே துறை விளக்கம் அளித்திருக்கிறது.
புதுடெல்லி,
சமீபத்தில் சில ரெயில்வே நிலையங்களில் ரூ.50 வரை பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. குறுகிய தூர ரெயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த பிளாட்பார்ம் கட்டண உயர்வும் அமைந்திருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக ரெயில்வே துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும்வகையில் சில ரெயில்வே நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிக கூட்டம் காணப்படும் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மும்பை கோட்டத்தில் உள்ள 78 ரெயில் நிலையங்களில் 7 ரெயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம், கடந்த 2015-ம் ஆண்டு முதல் அந்தந்த கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
குறுகிய காலத்துக்கு பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை புதிதல்ல, அது ஏற்கனவே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முறையாக அது இருக்கிறது. இதற்கு முன்பும், பல விழாக்காலங்களில் பிளாட்பாரம் கட்டணம் அதிகமாக விதிக்கப்பட்டு, பின்னர் அது படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த முறை, கொரோனா பரவல் காரணமாக மக்கள் நலத்தைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்குக்குப் பின் இது அமல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story