கொரோனா தினசரி பலி மீண்டும் 100-ஐ கடந்தது - கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வல்லுனர்கள் வலியுறுத்தல்
கொரோனா தினசரி எண்ணிக்கை மீண்டும் 100-ஐ கடந்துள்ளது. கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுடெல்லி,
உலகளவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடித்தாலும், உயிர்ப்பலியை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தினசரி உயிர்ப்பலி என்பது 100-க்குள் அடங்கி இருந்தது. இந்தநிலையில் நேற்று தினசரி கொரோனா உயிர்ப்பலி என்பது 100-ஐ கடந்து 113 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தப் பலியில் 60 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். தொடர்ந்து இந்த மாநிலத்தவரே தினசரி உயிர்ப்பலியில் முதல் இடம் வகிப்பது, அங்குள்ள மக்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சோகம், முடிவுக்கு வருவது எப்போது என்பதுதான் மராட்டிய மக்களின் கண்ணீர் ததும்பும் கேள்வியாக இருக்கிறது.
நேற்று பஞ்சாப்பில் 15 பேரும், கேரளாவில் 14 பேரும் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை என்பது 1 லட்சத்து 57 ஆயிரத்து 548 ஆக பதிவாகி இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா இறப்புவிகிதம் 1.41 சதவீதமாகவே உள்ளது.
நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், அசாம், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, குஜராத், அரியானா, இமாசலபிரதேசம், லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
நேற்றுமுன்தினம் 17 ஆயிரத்து 407 பேர் புதிதாக கொரோனாவின் பாதிப்புக்கு ஆளானார்கள். ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 17 ஆயிரத்துக்குள் அடங்கி 16 ஆயிரத்து 838 ஆக பதிவாகி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த நவம்பர் 15-க்கு பிறகு முதல் முறையாக தினசரி பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளது. கடந்த ஜனவரி 10-க்கு பின்னர், மராட்டியம், கேரளாவுக்கு அடுத்து பஞ்சாப்பில்தான் தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டி இருக்கிறது.
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 8,998 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக 13 ஆயிரத்து 819 பேர் குணம் அடைந்தனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 6,135 பேர் குணம் அடைந்தனர். கேரளாவில் 4,156 பேர் நலம் பெற்றனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 39 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைவோர் விகிதம் என்பது 97.01 சதவீதமாக உள்ளது. இதுஉலகின் மிகச்சிறந்த கொரோனா மீட்பு விகிதங்களில் ஒன்றாக உள்ளது.
கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 319 என பதிவாகி உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.58 சதவீதம் ஆகும்.
கொரோனா பாதிப்பு குறைவதற்கு தொடர்ந்து பொதுமக்கள் கட்டுப்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துவது முக்கியம், குறிப்பாக முக கவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டம் கூடாமல் இருத்தல் ஆகியவை மிக முக்கியம் என்று சுகாதார வல்லுனர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story