பாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜக-வில் இணைந்தார்.
புதுடெல்லி,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்குவங்க அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல தலைவர்களும் கட்சி மாறும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் பாஜக-வில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பாஜக-வை சேர்ந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றனர். இது அம்மாநில அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டு வந்த தினேஷ் திரிவேதி கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், திணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் விலகினார்.
திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகியதால் அவர் பாஜக-வில் இணைவார் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. அந்த கருத்துக்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்று தினேஷ் திரிவேதி பாஜக-வில் இணைந்துள்ளார்.
பாஜக-வில் இணந்தது தொடர்பாக தினேஷ் திரிவேதி கூறுகையில்,
’நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ? இல்லையோ? தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் நான் பங்கேற்பேன். திரிணாமுல் காங்கிரசை மேற்கு வங்காளம் நிராகரித்துள்ளது. அவர்களுக்கு (மக்கள்) வளர்ச்சி வேண்டுமே தவிர ஊழலும், வன்முறையும் தேவையில்லை.’
என்றார்.
திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவராக செயல்பட்டுவந்த தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தது சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story