திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்ரபோத்தி இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதேவேளை ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு மாறும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரசில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் பாஜகவுக்கு மாறி வருகின்றனர்.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக 2 ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர் நடிகர் மிதுன் சக்ரபோத்தி. 70 வயதான இவர் 2014 முதல் 2016 வரை எம்.பி.யாக செயல்பட்டு வந்தார். அதன் பின் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், மிதுன் சக்ரபோத்தி மீண்டும் அரசியலில் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இன்று பாஜக-வில் இணையப்போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள பாஜக பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் மிதுன் சக்ரபோத்தி பங்கேற்று பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை மேலும் உறுதிபடுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா நேற்று இரவு மிதுன் சக்ரபோத்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு மிதுன் சக்ரபோத்தி இன்று பாஜக-வில் இணைவார் என்ற தகவலை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story