அனைவரும் தடு்ப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா ஹர்சவர்தன் தகவல்
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள்ளே இருக்கிறது.
இதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் ஆகிய பிரிவினருக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார். டெல்லி மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நடந்த மருத்துவ மாநாட்டில் பேசும்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவை இந்தியாவில் இருந்து வேரறுக்கும் சாத்தியக்கூறுகளை பார்க்கும்போது, கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் நாம் வெற்றி பெறுவதற்கு 3 வழிகளை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
அதாவது தடுப்பூசி திட்டத்தில் இருந்து அரசியலை வேரறுக்க வேண்டும், தடுப்பூசிக்கு பின்னால் இருக்கும் அறிவியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், மக்கள் தங்கள் உற்றார்-உறவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான உலக நாடுகளைப்போல இல்லாமல், நாம் நிலையாக தடுப்பூசி வினியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். அவை அனைத்தும் சிறந்த செயல்திறன் மிக்கவை என நிரூபிக்கப்பட்டு உள்ளன. உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை ஒப்பிடுகையில், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் மிகவும் குறைவான பக்க விளைவுகளையே கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மருந்தகமாக தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்தவகையில் 62 நாடுகளுக்கு 5.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டு இருக்கின்றன.
உலக அளவில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்தான் போலியோவை தங்கள் நாடுகளில் ஒழிக்கவில்லை. இந்த 2 நாடுகளுக்காக ஒட்டுமொத்த உலகமும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது.
அதைப்போலவே உலகின் பிற நாடுகள் கொரோனாவை ஒழிக்கவில்லை என்றால், இந்தியாவும் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. இதனால்தான் தடுப்பூசியில் தேசியவாதத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.
ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் தொடர்ந்து கொரோனாவை பரப்பினால், நம் நாட்டில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. எனவே தடுப்பூசியின் ஒரு நியாயமான, சமமான வினியோகம் காலத்தின் கட்டாயம் ஆகும்.
இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.