சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் பிரதமர் மோடி பெருமிதம்


சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 8 March 2021 6:38 AM IST (Updated: 8 March 2021 6:38 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

மக்கள் மருந்தகங்கள்

பொதுமக்களுக்கு மலிவு விலையில், தரமான மருந்துகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாடு முழுவதும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் 7 ஆயிரத்து 500-வது மக்கள் மருந்தகத்தை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை, மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

அத்துடன், மக்கள் மருந்தக கடைக்காரர்கள் மற்றும் பயனாளிகளுடன் உரையாடினார். அவர் பேசியதாவது:-

பயனாளிகளுடன் உரையாடியதை வைத்து பார்க்கும்போது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மக்கள் மருந்தகங்கள் பரவி இருப்பது தெளிவாகிறது. ஏழை, நடுத்தர மக்களின் தோழனாக மாறி இருக்கிறது.

குறைந்த விலைக்கு மருந்து

6 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 100 மக்கள் மருந்தகங்கள்தான் இருந்தன. இப்போது, 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. இதை 10 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின்போது, நாட்டின் 75 மாவட்டங்களில் தலா 75 மருந்தங்களுக்கு மேல் செயல்படும் வகையில் அதிகாரிகள் பாடுபட வேண்டும்.

மக்கள் மருந்தகங்களில் ஏழை, நடுத்தர மக்கள், விலை உயர்ந்த மருந்துகளை குறைந்த விலைக்கு வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3 ஆயிரத்து 600 கோடியை மிச்சப்படுத்தி வருகிறார்கள்.

ஸ்டென்ட் விலை குறைப்பு

மக்கள் மருந்தகங்கள் மூலம், 11 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. 75 ஆயுஷ் மருந்துகளும் இங்கு கிடைக்கின்றன.

மத்திய அரசு, இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்ட் மற்றும் மாற்று மூட்டு போன்ற மருத்துவ சாதனங்களின் விலையை பலமடங்கு குறைத்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சமாகும்.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்படி, 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒன்றரை கோடி பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தால், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம்

எனவே, எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

யாருக்கும் மருத்துவ வசதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். அதற்காகவே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

மருந்து உற்பத்தி துறையில் இந்தியா சாதனை படைத்து உலகின் மருந்தகமாக திகழ்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250 என்ற மலிவு விலையிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

நமக்கும், வெளிநாடுகளுக்கும் சேர்த்து உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரிக்கிறோம். இதற்காக விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறோம்.

அதுபோல், 2014-ம் ஆண்டுக்கு முன்பு, 55 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள்தான் இருந்தன. 6 ஆண்டுகளில், 30 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளில், 180 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

======

செய்தி எண் 6 பார்ஆல் 36 பாயிண்ட்

Next Story