நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வரும் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல்


நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வரும் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 8 March 2021 3:09 PM IST (Updated: 8 March 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வரும் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரும் மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். 

அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இதனால், நந்திகிராம் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
அத்தொகுதிக்கு ஏப்ரல் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள சுவேந்து அதிகாரி வரும் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி வரும் 10-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story