புதிய வரிகள் இல்லாத கர்நாடக பட்ஜெட்
புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்தார். இதில் பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு:
புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்தார். இதில் பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் தாக்கல்
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் ட்டம் நேற்று பகல் 12 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. சரியாக 12.05 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்தார். கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென கோஷமிட்டனர்.
இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது எழுந்து பேசிய சித்தராமையா, "இது முறைகேடான அரசு. இந்த அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நாங்கள் இங்கு இருந்து பார்க்க மாட்டோம். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.
அதன் பிறகு எடியூரப்பாவின் பட்ஜெட் உரையை புறக்கணித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பட்டையை கைகளில் கட்டி இருந்தனர். பிறகு எடியூரப்பா பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.
விற்பனை வரி
இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது அவற்றின் மீதான மாநில அரசின் விற்பனை வரியை உயர்த்தும் முடிவை எடுக்கவில்லை என்று அரசே கூறியுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இது தவிர பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு அதிகளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து எடியூரப்பா கூறியதாவது:-
பெண் தொழில்முனைவோர்
* நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக பெங்களூரு உள்பட மாநகரங்களில் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகளை பராமரிக்கும் மையங்களாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பொிய அரசு அலுவலகங்களில் குழந்தை பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும்.
* பெண் தொழில்முனைவோருக்கு மகளிர் மேம்பாட்டு வாரியம், கர்நாடக நிதி கழகம் ஆகியவை மூலம் 4 சதவீத மானிய வட்டியில் ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்.
* சஞ்சீவினி திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 6,000 சிறு தொழில்கள் செய்ய உதவி செய்யப்படும். இதன் மூலம் 60 ஆயிரம் பெண்கள் பயன் பெறுவார்கள்.
* பெங்களூருவில் வனிதா சங்கதி திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை ஏற்றுமதி உற்பத்தி (கார்மெண்ட்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மகளிர் சுயஉதவி குழுக்கள்
* வேளாண் சந்தைகளில் கடைகள், குடோன் போன்றவற்றில் பெண்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
* மகளிர் சுயஉதவி குழுக்களை பலப்படுத்த மகளிர் சுயஉதவி குழு கொள்கை ஒன்றை வகுத்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.
* பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு ரூ.37 ஆயிரத்து 188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.500 கோடி செலவு செய்யப்படும்.
* விவசாய பல்கலைக்கழக்களில் விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
புதிய அணைகள்
* ஆடுகள் திடீரென இறக்க நேரிட்டால் அவற்றுக்கு நிவாரணம் வழங்கும் அனுக்கிரக கொடுகே திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
* கிருஷ்ணா மேல் அணை திட்டம், மகதாயி, மேகதாது, பத்ரா மேல் அணை திட்டம், எத்தின ஒலே ஆகிய திட்டங்களை விரைவாக அமல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
* உலகி வங்கி உதவியுடன் ரூ.1,500 கோடி செலவில் 58 புதிய அணைகள் கட்டப்படும்.
* சோதனை அடிப்படையில் சில மாநகரங்கள் மற்றும் நகர பகுதிகளில் மாலை நேர கல்லூரிகள் திறக்கப்படும்.
* கர்நாடகத்தில் 4 மண்டலங்களிலும் தலா ஒரு தாய்ப்பால் வங்கி தலா ஒன்று அமைக்கப்படும்.
* ரூ.100 கோடியில் சிவமொக்கா, மைசூருவில் மண்டல புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.
தங்கும் விடுதிகள்
* ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.26 ஆயிரத்து 5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
* சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
* ரூ.200 கோடியில் கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரத்து 194 கோடியில் 9.74 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக 25 நடமாடும் மருத்துவ மையங்கள் தொடங்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்கள்
* கல்யாண கர்நாடக மேம்பாட்டு வாரியத்திற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ரூ.60 கோடியில் மாநிலத்தில் 5 நீர்வழி பாதைகள் அமைக்கப்படும்.
* 58.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெளிவட்டச்சாலை-விமான நிலைய மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் திட்ட மதிப்பு ரூ.14 ஆயிரத்து 788 கோடி ஆகும். இதற்காக ரூ.1,600 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெங்களூருவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் தானியங்கி முறையில் பஸ் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது.
* பெங்களூருவின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.7,795 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story