ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்டப்படும்; கர்நாடக பட்ஜெட்டில் தகவல்


ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்டப்படும்; கர்நாடக பட்ஜெட்டில் தகவல்
x
தினத்தந்தி 9 March 2021 8:19 AM IST (Updated: 9 March 2021 8:19 AM IST)
t-max-icont-min-icon

கே.சி.வேலி திட்ட பணி ரூ.450 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்படும்
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கோலார், சிக்கபள்ளாப்பூர் மாவட்டங்களில் வறட்சி நிலவுவதை தவிர்க்கவும் நிலத்தடி நீர் அதிகரிக்கவும் பெங்களூரு நகரில் கழிவு நீரை சுத்திகரித்து கே.சி.வேலி திட்டத்தின் கீழ் குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இரு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க கே.சி.வேலி நீர் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. பெங்களூருவில் சேமிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவு 248 மில்லியன் லிட்டர் ஆக உயர்த்த ரூ.450 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டம் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கூட்டாக செயல்படுத்தும்.

பெங்களூரு நகரில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அர்காவதி, காவிரி திட்டத்தின் கீழ் மேகதாது குறுக்கே ரூ.9,000 கோடி செலவில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்த ஏற்கனவே, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மேகதாது குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்படும்.

நடை மேம்பாலங்கள்
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை திட்டம் 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவை 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ளது.பெங்களூருவில் இருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக பெங்களூரு சிட்டி மற்றும் யஷ்வந்தபுரத்தில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை மெமு ெரயில் 
சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், விரைந்து செல்ல வசதியாக, பெங்களூரு சிட்டி மற்றும் பையப்பனஹள்ளியில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை 2ஏ மற்றும் 2பி மெட்ரோ ெரயில் மார்க்கப் பணி மேற்கொள்ள ரூ. 14,788 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக கர்நாடக அரசு ரூ. 1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், ஞானபாதி இடையே தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பொதுமக்கள் வசதிக்காக இரண்டு நடை மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. ஓசூர் சாலை, தாசரஹள்ளி மற்றும் சிக்கபீதரஹள்ளியில் மெட்ரோ ெரயில் நிலையங்கள் அமைய இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே 7 நடை மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன,

ஒரே நாடு-ஒரே அட்டை
ஒரே நாடு-ஒரே அட்டை திட்டத்தின் கீழ் பெங்களூருவில் உள்ள 51 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஒரே அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் மற்றும் பெங்களூரு மாநகர பஸ்களில் பயணம் செய்ய திட்டம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் தானியங்கி டிக்கெட் வினியோகிக்கும் திட்டம் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் தொடங்கப்பட உள்ளது. வறுமையில் உள்ளவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரி பெங்களூரு நகரில் கட்டப்படும்.

இந்தியாவிலேயே உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பும் ஒரே ஆஸ்பத்திரியாக விக்டோரியா மருத்துவமனை திகழ்கிறது. இங்கு மேலும் உடல் உறுப்புகளை நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யவும், கூடுதலாக 120 படுக்கைகள் உயர்த்துவது உள்ளிட்ட மேலும், வசதிகள் மெற்கொள்ள ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Next Story