மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் அவுரங்காபாத் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
அவுரங்காபாத்,
அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் சுனில் சவான் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அஸ்திக் குமார் பாண்டே, போலீஸ் கமிஷனர் நிகில் குப்தா, போலீஸ் சூப்பிரண்டு பாட்டீல் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பகுதி ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 11-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 4-ந்தேதி வரை வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சுனில் சவான் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் படி ஊரடங்கு நாட்களில் திருமண அரங்குகளில் திருமணம் நடத்த அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பதிவு திருமணத்திற்கு அனுமதி உண்டு. ஊரடங்கு நாட்களில் உலக புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா குகை கோவில் மூடப்படுகிறது. இதைத்தவிர பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
மேலும் வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகள், மார்க்கெட்டுகள், மால்கள், சினிமா திரையரங்கம் செயல்படாது. ஆனால் அத்தியாவசிய சேவைகளுக்கு தினமும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஓட்டல்கள், உணவகங்கள் தினமும் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். மேலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அரசியல், மத, சமூக கூட்டங்கள், அணிவகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல் குளங்கள் மூடப்பட்டு இருக்கும். விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சந்தையில் வியாபாரிகள் கொரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதாக உறுதியளித்தால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார். மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்று எண்ணிக்கை 52 ஆயிரத்து 103 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story