எல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் தான்; மராட்டிய பட்ஜெட்டில் புதிதாக ஒன்றும் இல்லை; தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
மராட்டிய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஒன்றும் இல்லை, எல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் தான் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
மராட்டிய பட்ஜெட் குறித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாய கடன்பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்திற்குள் நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் அடைப்பது குறித்து அறிவிப்பு ஒன்றும் இல்லாததை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். முந்தைய பயிர்க்கடன் தள்ளுபடியின்போது பயன்பெறாத 45 சதவீத விவசாயிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் ஒன்றும் பேசப்படவில்லை.
மேலும் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
ரூ.3 லட்சம் பயிர்க்கடன் வைத்திருப்பவர்கள் சரியான நேரத்தில் அசலை கட்டினால் அவர்களின் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பும் தவறாக வழிநடத்தகூடியது ஆகும். ஏனென்றால் 80 சதவீத விவசாயிகள் சிறிய நிலங்களை தான் வைத்திருக்கிறார்கள். அவர்களின் கடன்கள் ரூ.1 லட்சத்தை தாண்டாது.
இந்த பட்ஜெட் ஏழைகளை முற்றிலும் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது.
மத்திய அரசு திட்டம்ஜல்னா- நாந்தெட் சாலையமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை தங்கள் சொந்த திட்டம் போல மாநில அரசு கூறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருப்பதாக அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டினாலும் அதன் மீதான வரிகளை குறைக்க முன்வரவில்லை.
மராட்டிய பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான், மத்திய திட்டங்களுடன் இணங்கிபோகும் வகையிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.