அசாம் முதல்மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்
அசாம் முதல்மந்திரி சர்பானந்தா சோனாவால் மஜூலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முதல்மந்திரி சர்பானந்த சோனாவால் பாஜக சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். மஜூலி தொகுதியில் போட்டியிடும் சர்பானந்த சோனாவால் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் அசாமில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 67 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story