தேர்தல் நேரத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முதலிடம்!


தேர்தல் நேரத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முதலிடம்!
x
தினத்தந்தி 11 March 2021 5:30 PM GMT (Updated: 2021-03-11T23:00:34+05:30)

கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் நேரத்தில் 170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி உள்ளனர்.

புதுடெல்லி

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தேர்தல் நேரத்தில் 170 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்துள்ளது ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தல்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் சுருக்கமாக  ஜனநாயக சீர்திருத்த சங்கம் சமீபத்தில் நடத்தியுள்ளது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் 433 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஆய்வு செய்துள்ளனர்.

2016 முதல் 2020ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிக அளவாக 170 எம்.எல்.ஏக்கள் தேர்தல் நேரத்தில் விலகி வேறு கட்சிகளில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவின் 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வேறு கட்சிகளில் இணைந்துள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறியதால் தான் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகள் இதே காலகட்டத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்த 405 எம்.எல்.ஏக்களில் 182 பேர் பாஜக மூலம் வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். 38 பேர் காங்கிரஸ் கட்சியிலும், 25 பேர் தெலங்கானா ராஷ்டீரிய சமிதியிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்த 16 மேல்சபை எம்.பிக்களில் 10 பேர் பாஜக மூலம் வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இதே போல 12 மக்களவை எம்.பிக்களில் 5 பேர் காங்கிரஸ் மூலம் வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இது 2019 தேர்தல் நேரத்தில் நடந்துள்ளது.

Next Story