இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ்ஆதி தலைமையில் உயர்மட்ட குழு; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ்ஆதி தலைமையில் உயர்மட்ட குழு; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 11 March 2021 10:24 PM GMT (Updated: 11 March 2021 10:24 PM GMT)

இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ்ஆதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் பஞ்சமசாலி சமூகம், தங்களை 2ஏ இட ஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறது. குருப சமூக மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அதுேபால் வால்மீகி சமூகத்தினர், தங்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்படி பல்வேறு சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்டு கர்நாடகத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இது கர்நாடக பா.ஜனதா அரசுக்கு நெருக்கடிையை ஏற்படுத்தியுள்ளது.

நியமனம்

இந்த இட ஒதுக்கீடு குறித்து ஆழமாக ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்மட்ட குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

உயர்மட்ட குழு

மந்திரிசபையில் எடுத்த முடிவின்படி இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்க கர்நாடக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ்ஆதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்களாக மாநில அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் ரத்னபிரபா, மைசூரு மகாராணி கலை கல்லூரி உதவி பேராசிரியர் பி.வி.வசந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Next Story