கொரோனாவை கட்டுப்படுத்த, பஞ்சாபில் பள்ளிகள் மூடல்; 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு


கொரோனாவை கட்டுப்படுத்த, பஞ்சாபில் பள்ளிகள் மூடல்; 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு
x
தினத்தந்தி 12 March 2021 8:35 PM GMT (Updated: 12 March 2021 8:35 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டது. லூதியானா, பாட்டியாலா, மொகாலி, உள்பட 8 மாவட்டங்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மாநில பள்ளிக் கல்வித் துறையானது அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சர் பிறப்பித்தார். ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், செய்முறைத் தேர்வுக்கு தயாராவது உள்ளிட்ட ஆசிரியரின் வழிகாட்டலுக்காக பள்ளிக்கு வரவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இறுதித் தேர்வுகள், கடுமையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் மார்ச் 16 முதல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று பஞ்சாபில் 1318 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Next Story