நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு ஆகஸ்டு 1-ந் தேதி நடக்கிறது; மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு ஆகஸ்டு 1-ந் தேதி நடக்கிறது; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 12 March 2021 8:44 PM GMT (Updated: 12 March 2021 8:44 PM GMT)

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு (நீட்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். ஆகிய படிப்புகளுக்கான நீட் (இளநிலை) தேர்வு 2021-ஆனது தேசிய தேர்வு நிறுவனத்தின் மூலம் தகுந்த விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த தேர்வானது வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி நடத்தப்படுவதாக கூறியுள்ள அந்த நிறுவனம், இந்தி, ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் எழுத்து தேர்வாக நடத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதி, வயது, இடஒதுக்கீடு, இருக்கை விவரம், தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story