போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை சிவசேனா பாதுகாக்கிறது; தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு


தேவேந்திர பட்னாவிஸ்
x
தேவேந்திர பட்னாவிஸ்
தினத்தந்தி 14 March 2021 9:54 PM GMT (Updated: 14 March 2021 9:54 PM GMT)

என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை சிவசேனா பாதுகாப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

மாநில அரசால் காக்கப்பட்டார்

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை என்.ஐ.ஏ. கைது செய்து உள்ளது. இதில் சச்சின் வாசேவை சிவசேனா பாதுகாப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

காவல்துறையில் இதுபோன்ற ஒருவர் பணி செய்தால், எப்படி சட்டம்- ஒழுங்கு காக்கப்படும்? வாசே மாநில அரசால் காக்கப்பட்டார். தற்போது என்.ஐ.ஏ. ஆதாரங்களுடன் அவரை கைது செய்து உள்ளது. இது தொடக்கம்தான் பல தகவல்கள் இன்னும் வெளிவரும்.

வெட்ககேடு

நான் முதல்-மந்திரியாக இருந்த போது சிவசேனாவினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த சச்சின் வாசேவை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கூறினர். நான் அதுகுறித்து அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டேன். அவர் கோர்ட்டு உத்தரவால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்ப்பது சரியாக இருக்காது என்றார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஆள்பற்றாக்குறை என கூறி மகாவிகாஸ் அகாடி அரசு அவரை மீண்டும் பணியில் சேர்த்தது. மேலும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணி வழங்கப்பட்டது. மாநில அரசின் ஆதரவு இருந்ததால், துணை இன்ஸ்பெக்டராக இருந்த போது அவர் முக்கிய வழக்குகளை விசாரித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியை நேற்று வரை மாநில அரசு பாதுகாத்தது வெட்கக்கேடானது. சிவசேனா அரசு அமைதியை சீர்குலைக்க விரும்பியவருக்கு ஆதரவு அளிக்கிறது" என்றார்.


Next Story