திரிணாமுல் காங்கிரசின் துணை தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமனம்


திரிணாமுல் காங்கிரசின் துணை தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமனம்
x
தினத்தந்தி 15 March 2021 6:35 AM GMT (Updated: 15 March 2021 6:35 AM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கொல்கத்தா நகரில் திரிணாமுல் காங்கிரசில் கடந்த சனிக்கிழமை இணைந்துள்ளார்.  இதன்பின்னர் டி.எம்.சி. பவனுக்கு வருகை தந்த சின்ஹா அக்கட்சியில் இணைந்ததுபற்றி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அடல் ஜி காலத்தில் கருத்தொற்றுமையில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால், இன்றைய அரசு அழிப்பதிலும், வெற்றி பெறுவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது.  பா.ஜ.க.வில் இருந்து அகாலிகள், பிஜு ஜனதா தளம் வெளியேறி விட்டது.  இன்று பா.ஜ.க.வுடன் யார் நிற்கின்றனர்? என கேள்வி எழுப்பினார்.

அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தது பற்றி கூறும்பொழுது, நந்திகிராமில் மம்தா ஜி மீது நடந்த தாக்குதலே அக்கட்சியில் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது.  அந்த தருணத்தில், திரிணாமுல் காங்கிரசில் இணைந்து மம்தா ஜிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவானது என்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்து வரும் சூழலில், பா.ஜ.க.வில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து உள்ளார்.  அக்கட்சியின் துணை தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு சின்ஹா இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story