மீண்டும் ரூ.2000 நோட்டு அச்சிடப்படுகிறதா? நாடளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்


மீண்டும் ரூ.2000 நோட்டு அச்சிடப்படுகிறதா? நாடளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 15 March 2021 7:10 PM GMT (Updated: 15 March 2021 7:10 PM GMT)

2 ஆயிரம் ரூபாய் நோட்டு மிகவும் அரிதாகக் காணப்படும் நிலையில் மீண்டும் 2 ஆயிரம் நோட்டு அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டு, ரூ.200 எனப் பல வண்ணங்களில், அளவுகளில் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. ஆனால், மீண்டும் அச்சடிக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்கூர் மக்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

2018-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.2 ஆயிரம் கரன்சி நோட்டுகள் 336.2 கோடி உள்ளன. 2021, பிப்ரவரி 26-ம் தேதி நிலவரப்படி, 249.9 கோடி எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. எண்ணிக்கையில் இது 2.01 சதவீதமாகவும், மதிப்பில் 17.78 சதவீதமாகவும் இருக்கிறது.

குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து அரசு தான் முடிவு எடுக்கும். கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் அச்சகம் சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 354.39 கோடி எண்ணிக்கையான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக 2019ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. 2017-18ஆம் ஆண்டில் 11.15 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் அச்சடிக்கப்பட்டன.

2018-19ஆம் ஆண்டில் மேலும் குறைக்கப்பட்டு, 4.66 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story