விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்


விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
தினத்தந்தி 15 March 2021 7:42 PM GMT (Updated: 15 March 2021 7:42 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அப்பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து விலை உயர்வு

உற்பத்தி வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரியாக கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொண்டு வராததால், அவற்றின் மீது உற்பத்தி வரி, வாட் வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி வரி உயர்வால், எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விலையை கட்டுப்படுத்த எரிபொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இப்போது இல்லை

இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.

வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரிகளை குறையுங்கள்

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் கூறியதாவது:-

தற்போதைய நிதி நிலைமையை கருதி, உள்கட்டமைப்பு மற்றும் இதர வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி வருவாய் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் யோசனையை எந்த மாநிலமும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் அதுகுறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், அவற்றின் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அதுபோல், மத்திய அரசும் வரியை குறைக்க முயற்சிக்கும். வரியை குறைப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.2,000 நோட்டுகள்

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக அனுராக் தாக்குர் மக்களவையில் கூறினார். கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை அச்சிடுவது பற்றி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவு செய்யும். ரூ.2,000 நோட்டுகளை பொறுத்தவரை, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அதை அச்சிடுவதை நிறுத்தி விட்டோம். அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 26-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 249 கோடியே 90 லட்சம் எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

இதற்கிடையே, மாநிலங்களவையில் நரேந்திர ஜாதவ் என்ற எம்.பி. பேசியதாவது:-

ஏப்ரல் மாதம், கல்வி நிறுவனங்களில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குகிறது. ஆசிரியர்கள் ஆரோக்கியமாக இருந்து பாடம் நடத்த வேண்டும்.

எனவே, ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக வரையறுக்க வேண்டும். அங்கன்வாடி முதல் பல்கலைக்கழகம்வரை அனைத்துவகையான ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story