மராட்டியத்துக்கு 2.20 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ் வேண்டும்; மத்திய அரசிடம் கோரிக்கை


மராட்டியத்துக்கு 2.20 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ் வேண்டும்; மத்திய அரசிடம் கோரிக்கை
x

மராட்டியத்துக்கு 2.20 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் வேண்டும் என மத்திய அரசிடம் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கோரிக்கை விடுத்து உள்ளார்.

மத்திய அரசு அதிருப்தி

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் ஆகும். தற்போது மாநிலத்தில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மாநிலத்தில் புதிதாக 15 ஆயிரத்து 51 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன் சமீபத்தில் மாநில செயலாளர் சீத்தாராம் குந்தேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், அவர் மாநில அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக அதிருப்தி தொிவித்ததாக கூறப்படுகிறது.

2.20 கோடி டோஸ் மருந்து

இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே டெல்லி சென்று உள்ளார். மேலும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் அவர், "மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டு வருகிறோம். இதற்காக அடுத்த 3½ மாதத்தில் 2.20 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் தேவைப்படுகிறது.

நீங்கள் வாரத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை மராட்டியத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்" என கூறியுள்ளார்.


Next Story