ஜனநாயகத்தை பா.ஜனதா விலைபொருளாக மாற்றிவிட்டது - முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு


ஜனநாயகத்தை பா.ஜனதா விலைபொருளாக மாற்றிவிட்டது - முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 March 2021 7:22 PM GMT (Updated: 17 March 2021 7:22 PM GMT)

புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு செய்து ஜனநாயகத்தை பா.ஜனதா விலைபொருளாக மாற்றிவிட்டதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டி உள்ளார்.

பெரும்பாவூர்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை பா.ஜனதா விலைபொருளாக மாற்றிவிட்டது. ஜனநாயகவாதிகளை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக உள்ளது. அவர்களிடம் உயர்ந்த விலைக்கு விற்பனையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதாவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், மீதமுள்ள தலைவர்களும் எதிர்காலத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது கண்கூடாக தெரியவருகிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் நேராக பா.ஜனதாவில் சேர எவ்வித சிரமத்தையும் சந்திக்க வேண்டியது இல்லை என்ற நிலை காணப்படுகிறது. விவசாயிகளை காப்பாற்றுவோம் என்று கூறும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை.

இதுபோன்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய குடியுரிமை திருத்த சட்ட(சி.ஏ.ஏ.) எதிர்ப்பு நிலைப்பாடு, எந்த அளவுக்கு உண்மை என்பதை எவ்வாறு கணக்கிட முடியும். நாட்டில் ஜனநாயகத்தை தகர்க்கும் பா.ஜனதாவை அகற்றவே காங்கிரஸ் கட்சியை சில மாநிலங்களில் மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால் அதன் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு விலைபோய்விட்டனர். இதனால் அந்த மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து உள்ளது.

கோவா, மணிப்பூர், மத்திய பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களே இதற்கு உதாரணம் ஆகும். அங்கு ஆட்சியை கவிழ்த்து பா.ஜனதா கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இதுபோன்று பா.ஜனதாவில் சேர தயாராக உள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறும் பொய்களை நம்ப வேண்டுமா? என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story