மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது மிகவும் தீவிரமான விஷயம் -சுப்ரீம் கோர்ட்


மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது மிகவும் தீவிரமான விஷயம் -சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 18 March 2021 10:18 AM GMT (Updated: 18 March 2021 10:18 AM GMT)

பழங்குடியினர் மற்றும் ஏழைகள் உள்பட மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அது மிகவும் தீவிரமான விஷயம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

புதுடெல்லி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்  கொய்லி தேவி இவரது 11 வயது மகள்  சந்தோஷி குமாரி, 2017 ல் பட்டினியால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வில்லை என்பதால் கொய்லி தேவி ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளை மீட்டெடுக்க வேண்டும்  மற்றும் மகளின் மரணத்திற்கான இழப்பீடு வழங்கவேண்டும் என கொய்லி தேவி சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் கொய்லி தேவி  சார்பில்   மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ்  மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆதார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான வலியுறுத்தல் காரணமாக  நாட்டில் கிட்டத்தட்ட நான்கு கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்ய ப்பட்டு உள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் போலியானவை என்று மத்திய அரசு சாதாரணமாக  விளக்கம் அளிக்கிறது. 

உண்மையான காரணம் என்னவென்றால், கருவிழி அடையாளம் காணல், கட்டைவிரல் ரேகை எடுத்தல், ஆதார் வைத்திருக்காதது, கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் இணையம் செயல்படாதது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப  கோளாறால் ஏற்படுபவை.  சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் ரேஷன் கார்டுகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உண்மையில், உணவு பற்றாக்குறை தவிர வேறு எதுவும் இல்லை. இந்த கொடூரமான முறை கோடிக்கணக்கான  இந்தியர்களை உணவு வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளியது.  ஜார்கண்ட், உத்தரபிரதேசம்,ஒடிசா, கர்நாடகா, மத்தியபிரதேசம்,மராட்டியம், பீகார், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் பட்டினி இறப்புக்கு வழிவகுத்தது  என கூறி உள்ளார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது

விசாரணையின் போது கோன்சால்வ்ஸ் ஆதாரை ரேஷன் கார்ட்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு  தொடர்ந்து வலியுறுத்துவது துரதிர்ஷ்டவசமானது, ஏனெனில் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக ஆதார் மீது எந்த வற்புறுத்தலும் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்  தெளிவான விதிமுறைகளில் கூறியுள்ளது.

பழங்குடியினருக்கு ஆதார் அட்டைகள் இல்லை அல்லது பழங்குடினருக்கு  மற்றும் கிராமப்புறங்களில் அடையாளம் இல்லை. ஆதார் அட்டைகளை நம்பியிருப்பதால், மூன்று கோடி ரேஷன் கார்டுகள்  போய்விட்டன என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா என வாதாடினார்.

மூன்று கோடி அட்டைகள் போய்விட்டனவா?" என தலைமை நீதிபதி நம்பமுடியாமல் கேட்டார்.

ஆம், பட்டினி இறப்புகள் நடக்கின்றன. மூன்று கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன ... மத்திய அரசின்  அறிவிப்பை என்னால் காட்ட முடியும். இது பிரதமரின் அறிவிப்பு என்று  கோன்சால்வ்ஸ் பதிலளித்தார்.

வயிற்றுப்போக்கு மற்றும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக , மாநிலங்கள் மறுப்பு தெரிவிக்கின்றன என  அவர் வாதிட்டார். 

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, மனுதாரர் தரப்பு அளித்த தகவல்கள் தவறானவை  என்றார். ரேஷன் கார்டு வழங்குவது ஆதார் அட்டையைச் சார்ந்தது அல்ல. மாற்று வழிமுறைகள்  உள்ளன. தவிர, ரேஷன் கார்டுகள் வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

இந்த  மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதை விட, மனுதாரர்கள் அந்தந்த மாநில ஐகோர்ட்டை  நாடவேண்டும். மனுதாரர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறை தீர்க்கும் வழிமுறைகளில்   தங்கள் பிரச்சினையை எழுப்பாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு  வந்துள்ளனர் என கூறினார்.

ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற மனுதாரர்களின் அறிக்கையின் காரணமாக இந்த வழக்கை நாங்கள்  பரிசீலிக்க  உள்ளோம் ... இது மிகவும் தீவிரமான விஷயம்" என்று தலைமை நீதிபதி போப்டே  கூறினார்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்குள் உள்ள நிவாரண வழிமுறையை அரசாங்கம் சரியான இடமாகக் காட்டியிருந்தாலும், மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் ஒரு மாநிலமும் கூட சுயாதீன நோடல் அதிகாரிகளையோ அல்லது மாவட்ட குறை தீர்க்கும் அதிகாரியையோ சட்டத்தின் கீழ் நியமிக்கவில்லை என நீதிபதி கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆதார் எண் இல்லாததால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படும் புகாருக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் முக்கியமானது. இது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த உத்தரவுக்கு மத்திய அரசுக்கு எதிரானது என கருத வேண்டாம்’ என தெரிவித்தனர்.

2020 இல்  இந்தியா உலகளாவிய பசி குறியீட்டில்  107 நாடுகளில் 94 இடத்தி  ‘தீவிர பசி பிரிவில்’ உள்ளது குறிப்பிடதக்கது.

Next Story