‘மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது’ - ராகுல் காந்தி


‘மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது’ - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 19 March 2021 9:25 PM GMT (Updated: 19 March 2021 9:25 PM GMT)

பா.ஜ.க., மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கவுகாத்தி,

முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில், 126 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரையில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார்.

நேற்று அவர் திப்ருகாரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவொரு மதமும் பகைமையை போதிக்கவில்லை. ஆனால் பா.ஜ.க., மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக வெறுப்புணர்வை விற்பனை செய்கிறது.

சமூகத்தை பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. வெறுப்புணர்வை பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியோ அன்பையும், நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும். நாக்பூரில் ஒரு சக்தி (ஆர்.எஸ்.எஸ்.) உள்ளது. அதுதான் ஒட்டுமொத்த தேசத்தையும் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்டின் எதிர்காலமாக இருக்கிற இளைய தலைமுறையினர் அன்பினாலும், நம்பிக்கையினாலும் இந்த முயற்சியை தடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story