இலங்கை, தைவான் நாடுகளின் புகைப்படங்களை காண்பித்து அசாம் என்கிறது காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு


இலங்கை, தைவான் நாடுகளின் புகைப்படங்களை காண்பித்து அசாம் என்கிறது காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 March 2021 11:07 AM GMT (Updated: 20 March 2021 11:07 AM GMT)

இலங்கை, தைவான் நாடுகளின் புகைப்படங்களை அசாம் என காண்பித்து புண்படுத்தும் செயலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது என பிரதமர் மோடி பேரணியில் பேசியுள்ளார்.

கவுகாத்தி,

126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதன்படி, வருகிற 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும்.

இதனையடுத்து ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெறும்.  தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தல் நடைபெறும்.

அசாமில் தேர்தலை முன்னிட்டு சபுவா பகுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் திரளான கூட்டத்தினரின் முன் பேசும்பொழுது, 50 முதல் 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, இந்திய தேநீரின் மதிப்பை சீர்குலைப்பதற்கான விருப்பம் உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது, காண்பதற்கு வேதனை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற கட்சியை நீங்கள் மன்னிப்பீர்களா?  அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? இல்லையா?...  காங்கிரஸ் கட்சியானது அசாம் மக்களிடம் இருந்து வெகுதொலைவுக்கு சென்று விட்டது.  ஒரு சில நாட்களுக்கு முன் இலங்கையின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு இது அசாம் என்றது.

இதன்பின்னர் சில நாட்கள் கழித்து, தைவானின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து விட்டு இது அசாம் என்றது.  நம்முடைய அழகான அசாமிற்கு இழைக்கப்பட்ட அநீதி இது.  அசாம் மக்களை காங்கிரஸ் புண்படுத்தி விட்டது.

அசாமின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது.  அசாமில் ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சியும் பா.ஜ.க. அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  அசாமின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படுவதில் நாங்கள் முனைப்புடன் உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Next Story