மராட்டிய உள்துறை மந்திரி மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரபரப்பு குற்றச்சாட்டு


மராட்டிய உள்துறை மந்திரி மீது  மும்பை முன்னாள் போலீஸ்  கமிஷனர்  பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 March 2021 4:43 PM GMT (Updated: 20 March 2021 4:43 PM GMT)

மராட்டிய உள்துறை மந்திரி மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மும்பை,

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வசித்து வரும் மும்பையில் உள்ள 27 மாடி ஆடம்பர வீடு அருகே கடந்த மாதம் 25-ந் தேதி ஜெலட்டின் குச்சிகளுடன் கார் ஒன்று சிக்கியது. 

உலக பணக்காரர் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்துக்கு பயன்படுத்திய கார் ஏற்கனவே திருட்டு போனதாக அதன் உரிமையாளரான தானேயை சேர்ந்த வியாபாரி ஹிரன் மன்சுக் தெரிவித்து இருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 5-ந் தேதி அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு திகில் பாதையில் பயணிக்க தொடங்கியது.

இதில் வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மும்பை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சஞ்சய் வாசே (வயது 49) கடந்த 13-ந் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சஞ்சய் வாசே பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் 5 கார்களை என்.ஐ.ஏ. பறிமுதல் செய்துள்ளது. இதில் வெடிகுண்டு காரின் உண்மையான நம்பர் பிளேட், மும்பை கிராபர்ட் மார்க்கெட் அருகே மீட்கப்பட்ட காரில் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வழக்கை கையாண்ட விதம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அதிரடியாக ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். உடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளின் மன்னிக்க முடியாத தவறுக்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக உள்துறை மந்திரியான தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக் தெரிவித்தார். இந்த வழக்கில் கிரைம் நாவலை போல தொடர்ந்து திடுக்கிடும் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால் மர்ம முடிச்சுகளை மட்டும் அவிழவில்லை.

இந்த நிலையில்,  பரம்பீர்சிங், உள்துறை அமைச்சர் அனில்தேஷ் முக் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி பரம்பீர்சிங் இன்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக் மாதம் ரூ.100 கோடி வரை வசூலித்து தர வேண்டும் என உதவி இன்ஸ்பெக்டரை சச்சின் வாஸேயை கட்டாயப்படுத்தியதாகவும், இதையடுத்து முகேஷ் அம்பானியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுவிக்கவே வெடிபொருள் கார் சதி திட்டம் தீட்டியதாக கடிதத்தில் கூறியுள்ளார். 

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதனை மறுத்துள்ளார். தன் மீது போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

Next Story