சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா - 2 ஆம் நாள் சிறப்பு பூஜை


சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா - 2 ஆம் நாள் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 20 March 2021 10:20 PM GMT (Updated: 20 March 2021 10:20 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழாவின் 2 ஆம் நாளான நேற்று உத்சவபலி சிறப்பு பூஜை நடை பெற்றது.

திருவனந்தபுரம்,

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், படி பூஜை போன்றவை நடந்தன.

மாத பூஜையின் தொடர்ச்சியாக கடந்த 19 ஆம் தேதி ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி  சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் சுத்திகிரியை பூஜை நடந்தது. திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அந்த வகையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழாவின் 2 ஆம் நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் உத்சவபலி சிறப்பு பூஜை நடை பெற்றது. விழா நடைபெறும் நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story