சிறந்த தமிழ் படமாக ‘அசுரன்’ தேர்வு நடிகர் தனுசுக்கு தேசிய விருது விஜய் சேதுபதி, ஆர்.பார்த்திபனும் விருது பெறுகிறார்கள்


சிறந்த தமிழ் படமாக ‘அசுரன்’ தேர்வு நடிகர் தனுசுக்கு தேசிய விருது விஜய் சேதுபதி, ஆர்.பார்த்திபனும் விருது பெறுகிறார்கள்
x
தினத்தந்தி 23 March 2021 12:55 AM GMT (Updated: 23 March 2021 12:55 AM GMT)

‘அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய்சேதுபதி, சிறந்த துணை நடிகர் விருது பெறுகிறார்.

புதுடெல்லி, 

67-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. அதாவது 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த விருதுகள்அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த படமாக மோகன்லால் நடித்த ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம்’ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த நடிகர் தனுஷ்

சிறந்த நடிகராக நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அசுரன் படத்தில் அவரது சிறப்பான நடிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல், ‘போன்ஸ்லே’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாயிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு சிறந்த நடிப்புக்கான தேசிய விருது 2 நடிகர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

கங்கனா ரணாவத்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்கனா ரணாவத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகையாக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு ‘பகத்தார் ஹுரைன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சஞ்சய் புரன்சிங் சவுகான் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த துணை நடிகை விருது ‘தி தாஷ்கென்ட் பைல்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரமாக ‘கேடி (எ) கருப்பு துரை’ என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

டி.இமான்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்காக டி.இமான் மற்றும் பிரபுத்தா பானர்ஜி என்ற வங்காள மொழி இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே…’ என்ற பாடலுக்காக டி.இமான் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

தமிழில் சிறந்த படமாக தனுஷ் நடித்த ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியில் சிறந்த படமாக மறைந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் இயக்கிய ‘சிச்சோர்’ தேர்வாகி உள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘மகர்ஷி’ தெலுங்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதுமுக இயக்குனர் இயக்கிய படத்துக்கான இந்திரா காந்தி விருதுக்கு மாதுக்குட்டி சேவியர் இயக்கிய ‘ஹெலன்’ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒத்த செருப்பு

இந்த விருதுகள் தவிர, மேலும் அறிவிக்கப்பட்ட விருதுகள் வருமாறு:-

சிறந்த பின்னணி பாடகர்-பி.பிராக் (படம்:கேசரி, இந்தி, பாடல்: தேரி மிட்டி…).

சிறந்த பின்னணி பாடகி - சவானி ரவீந்திரா (படம்:பர்தோ, மராத்தி, பாடல்: ரான் பேதலா…).

சிறந்த ஒளிப்பதிவு - கிரீஷ் கங்காதரன் (படம் :ஜல்லிக்கட்டு, மலையாளம்).

சிறந்த திரைக்கதை - கவுசிக் கங்குலி (ஜியெஸ்தோபுத்ரோ-வங்காளம்), ஸ்ரீஜித் முகர்ஜி (கும்நாமி-வங்காளம்), விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி (தி தேஷ்கன்ட் பைல்ஸ்-இந்தி).

சிறந்த ஒலிப்பதிவு -ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு சைஸ் 7), மந்தர் கமலாபுர்கர் (திரிஜியா, மராத்தி), தேபஜித் (ஐவ்துக்-காசி).

ராஜு சுந்தரம்

சிறந்த எடிட்டிங் - நவீன் நூலி (ஜெர்சி-தெலுங்கு)

சிறந்த பாடல் -ஆரோடும் பராயுக வய்யா.. (பாடலாசிரியர்: பிரபா வர்மா, படம்: கோலாம்பி)

சிறந்த ஜூரி விருது- ஆர்.பார்த்திபன் (படம்: ஒத்த செருப்பு சைஸ் 7)

சிறந்த நடன இயக்குனர் - ராஜு சுந்தரம் (படம்: மகரிஷி, தெலுங்கு)

சமூக பிரச்சினைகளை அலசும் படம்-ஆனந்தி கோபால் (மராத்தி)

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் விருது-படம்:தாஜ்மகால்

இதுபோல், மேலும் பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விருதுகளை பிரபல இந்தி சினிமா இயக்குனர் என்.சந்திரா தலைமையிலான திரைப்பட தேர்வுக்குழு நிர்வாகிகள் அறிவித்தனர். நிகழ்ச்சியில், தேர்வுக்குழு உறுப்பினர் கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story