டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி


டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
x
தினத்தந்தி 23 March 2021 3:13 PM GMT (Updated: 23 March 2021 3:13 PM GMT)

டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி கடந்த 117 நாட்களாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நேற்று 118-வது நாளை எட்டியது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கடந்த நவம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை இந்த சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் அதிகபட்சமாக ரூ.487 கோடியும், அரியானாவில் ரூ.326 கோடியும், ராஜஸ்தானில் ரூ.1.4 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மட்டும் சாலை போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.


Next Story