ஆப்கானிஸ்தானின் அமைதி திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்க இந்தியா ஒப்புதல்


ஆப்கானிஸ்தானின் அமைதி திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்க இந்தியா ஒப்புதல்
x
தினத்தந்தி 24 March 2021 1:30 AM GMT (Updated: 24 March 2021 1:30 AM GMT)

ஆப்கானிஸ்தானின் அமைதி திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு மந்திரியிடம் இந்தியா தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு வெளியுறவு துறை மந்திரி முகமது ஹனீப் ஆத்மர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அவர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானின் அமைதி திட்டத்திற்கு இந்தியா சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.  அந்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறையை கவனத்தில் கொண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடனடியாக முன்வர வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானை இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

தலீபான் மற்றும் பயங்கரவாத குழுக்களிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையும்.  அதன்பின் தலீபான் அமைப்பினர், நாட்டின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று முகமது கூறினார்.

இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான தொடர்ச்சியான உயர்மட்ட ஒத்துழைப்புக்கான தேவையை வலியுறுத்திய தோவல், மண்டல மற்றும் சர்வதேச கருத்தொற்றுமை உள்ளிட்ட அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என கூறினார்.

ஆப்கானிஸ்தானிய மக்களிடையே ஒற்றுமை, மண்டல மற்றும் சர்வதேச அளவிலான கருத்தொற்றுமை ஆகியவை தொடர்ச்சியான அமைதியை எட்டுவதற்கு அத்தியாவசிய காரணிகளாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story