ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2021 7:24 PM GMT (Updated: 25 March 2021 7:24 PM GMT)

ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கை தினமும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராகவும், வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.பாரதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தொடர்பாக இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வக்கீல் யோகேஷ் கண்ணா சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இரு பிரிவினருக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது, முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்யக்கூடாது , மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story