ஏப்ரல் 1-ந் தேதி முதல் வெளிமாநிலத்தினர் பெங்களூரு வர கட்டுப்பாடு; ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி


ஏப்ரல் 1-ந் தேதி முதல் வெளிமாநிலத்தினர் பெங்களூரு வர கட்டுப்பாடு; ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 25 March 2021 10:47 PM GMT (Updated: 25 March 2021 10:47 PM GMT)

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே ஏப்ரல் 1-ந் தேதி முதல் பெங்களூருவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது.

கொரோனா அதிகரிப்பு
அதன் பின்னர் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியது. அதன் பின்னர் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதில் குறிப்பாக மாநில தலைநகரான பெங்களூருவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500, 1000 என்ற அளவில் இருந்தது. நேற்று பெங்களூருவில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு இருப்பதாக ெபாதுமக்கள் பீதியில் உள்ளனர்.

அதிகாரிகளுடன் மந்திரி ஆலோசனை
இந்த நிலையில் பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கொரோனா பரிசோதனை
பெங்களூருவில் நேற்று புதிதாக 1,600-க்கும் மேற் பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் புதிய உச்சம் ஆகும். பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு தான் அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. மராட்டியம், கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை சான்றிதழை காட்ட வேண்டும் என்றும், வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் 
ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.

இனி அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெங்களூருவுக்கு வருபவர்கள் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெங்களூருவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்ச்சிகளில் உள்அரங்கத்தில் 200 பேர், திறந்தவெளி அரங்கத்தில் 500 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்
கொரோனா பரவலை எதிர்கொள்ள பெங்களூருவில் ஒரு வார்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் அதிகரித்தால், ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் சானிடைசர் திரவத்தை தெளிப்பது, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை கொரோனா இல்லாத நகரமாக மாற்ற நாங்கள் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அடையாள முத்திரை
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் அவர்களின் கைகளில் அடையாள முத்திரை பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், நோய் இருந்தும் அறிகுறி இல்லாதவர்கள் வெளியில் நடமாடுவதால் தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய கொேரானா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது.

அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும். விக்டோரியா ஆஸ்பத்திரியில் 400 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரி, பவுரிங் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்தால் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் அரசின் ஒதுக்கீட்டிற்கு கேட்டு பெறப்படும்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story