ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு


ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
x
தினத்தந்தி 25 March 2021 11:49 PM GMT (Updated: 25 March 2021 11:49 PM GMT)

மும்பையில் ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தாராவியில் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நகரில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு

மும்பையில் கொரோனா வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 2 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றும் மும்பையில் 5 ஆயிரத்து 504 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 115 ஆக அதிகரித்து உள்ளது. இதைத்தவிர கொரோனா தொற்றினால் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 620 ஆக அதிகரித்து உள்ளது.

தாராவியில் 58 பேர்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 2 மடங்காக அதிகரித்து வருகிறது. நேற்று தாராவியில் 58 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 589 ஆக உயர்ந்தது. இதே போல தாதரில் 47 பேருக்கும், மாகிமில் 75 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தடுப்பூசி இலக்கு

தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட மும்பை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. தினசரி பரிசோதனையை 60 ஆயிரமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை பெறுவதற்காக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.


Next Story