மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்ட புகாரில் முதல்-மந்திரி விசாரணைக்கு உத்தரவிட்டால் வரவேற்பேன்; மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்


உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்
x
உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்
தினத்தந்தி 26 March 2021 12:01 AM GMT (Updated: 26 March 2021 12:01 AM GMT)

ரூ.100 கோடி மாமூல் கேட்டதாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விசாரணை நடத்த உத்தரவிட்டால் நான் வரவேற்பேன் என உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

மாநில அரசுக்கு நெருக்கடி

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் மராட்டிய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக பரம்பீர் சிங் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும், அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

முதல்-மந்திரிக்கு கடிதம்

இதற்கிடையே உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.இந்தநிலையில் மந்திரி அனில் தேஷ்முக் நேற்று வெளியிட்ட தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 21-ந் தேதி முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதில் “முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் என்மீது சுமத்திய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு ஏற்கனவே நான் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளேன்.

அவர் என் மீது விசாரணைக்கு உத்தரவிட்டால் அதை நான் வரவேற்பேன். வாய்மையே வெல்லும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story