மேற்கு வங்காளம், அசாமில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு


மேற்கு வங்காளம், அசாமில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 March 2021 1:48 AM GMT (Updated: 26 March 2021 1:48 AM GMT)

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தொடங்கின.

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு நாளை (27-ந்தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 29-ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது அந்த கட்சியிடம் இருந்து பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

அங்கு முதல் கட்ட தேர்தல் 30 சட்டசபை தொகுதிகளில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது. 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 21 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

அசாம் மாநிலத்தில் 126 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நாளை (27-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ந்தேதி முடிகிறது.

இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைத் தொடர்வதற்காக போராடுகிறது. அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இங்கு நாளை 47 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. இவற்றில் 39 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணி கட்சியான அசாம் கணபரிசத்துக்கு 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் 2 தொகுதிகளில் அசாம் கணபரிசத், பா.ஜ.க.வுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த முதல் கட்ட தேர்தலில் 23 பெண் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

Next Story