மேற்கு வங்காளம், அசாமில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு


மேற்கு வங்காளம், அசாமில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 March 2021 7:07 PM GMT (Updated: 26 March 2021 7:07 PM GMT)

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று (சனிக்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். இவர்களின் எதிர்காலத்தை 73 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்றைய தேர்தல் நடைபெறும் தொகுதிகள், பெரும்பாலும் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வந்த இடத்தை சேர்ந்தவை என்பதால் அந்த பகுதிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

இங்கு 23 பெண்கள் உள்பட 264 வேட்பாளர்களின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக 81 லட்சத்துக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story