3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு


3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2021 9:44 PM GMT (Updated: 26 March 2021 9:44 PM GMT)

3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெலகாவி மக்களவை தேர்தலில் சதீஷ் ஜார்கிகோளியை எதிர்த்து மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் மனைவி போட்டியிடுகிறார்.

பெங்களூரு:

இடைத்தேர்தல்

  கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பசவகல்யாண், மஸ்கி மற்றும் பெலகாவி மக்களை தொகுதிகளுக்கு வருகிற 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். காங்கிரஸ் கட்சி மஸ்கி, பசவகல்யாண் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதாவது மஸ்கி ெதாகுதியில் பசவனகவுடா துருவிக்கல், பசவகல்யாண் தொகுதியில் மல்லம்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

காங். சார்பில் சதீஷ் ஜார்கிகோளி

  பெலகாவி மக்களவை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்தது.அந்த தொகுதியில் தற்போது அக்கட்சியின் மாநில செயல் தலைவராக உள்ள சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

  இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பெலகாவி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சதீஸ் ஜார்கிகோளி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் இன்றோ (சனிக்கிழமை) அல்லது வருகிற 29-ந் தேதியோ மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. சதீஷ் ஜார்கிகோளி, ஆபாச சி.டி. விவகாரத்தில் மந்திரி பதவியை இழந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

  ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3 தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

  அதில், பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மங்களா அங்கடி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மஸ்கி தொகுதியில் பிரதாப்கவுடா பட்டீல், பசவகல்யாணில் சரனுசலகார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

சதீஷ் ஜார்கிகோளி- மங்களா அங்கடி போட்டி

  இதில் மஸ்கி தொகுதி வேட்பாளர் பிரதாப்கவுடா பட்டீல், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெலகாவி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சதீஷ் ஜார்கிகோளியும், அவரை எதிர்த்து மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் மனைவி மங்களா அங்கடியும் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சம பலமாக உள்ளது. ஆனால் அங்கு ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு செல்வாக்கு கிடையாது. இருப்பினும் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். ஆனால் இன்னும் இக்கட்சி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

30-ந்தேதிக்கு பிறகு...

  இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் என்பதால், 31-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதுபோல் காங்கிரஸ் கட்சியும் 3 தொகுதிகளில் வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.

Next Story